முடிந்தது.....தொடரும்
வணக்கம்...
இயன்ற வரை இனிய தமிழில் என்கிற இந்த வலைப்பதிவினை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.....புதியதொரு பெயரில் வலைப்பதிவுகள் தொடரும்......
இதுகாரும் இப்பதிவுகளில் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.....
இந்தப் வலைத்தளத்தில் இரண்டு பதிவுகள் முழுமை பெறாமலே நிற்கிறது....1.திருமலையான் யார்?....2.மந்திரம் தந்திரம் யந்திரம்.....காலம் கனியும் போது அவற்றை நிறைவு செய்ய முயற்சிக்கிறேன்.....
அன்பன்
சதயம்@சரவணக்குமார்
பாகம் 1 முற்றிற்று.....
தமிழ்மணத்தின் மட்டுறுத்தல் விதிகளுக்கு எதிரான எனது எதிர்ப்பினை பதிவுசெய்யும் வகையில் இந்தப்பதிவு மட்டுறுத்தல் செய்யப்படவில்லை. எனவே,தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் என்ற பகுதியில் இந்தப் பதிவு திரட்டப்படாது.
நானும் சாய்பாபாவும்-10
-1-2-3-4-5-6-7-8-9- சாபாபாவின் ஆன்மீகம் மற்றும் தகிடுதத்தங்களை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு சக மனிதனாய் அவரை கொஞ்சம் அலசிப்பார்ப்போமா....
நீங்களும் நானும் வாழ்ந்திராத அடிமை இந்தியாவில், 1937களில் எந்தவித வெளியுலக Exposure ம், பிண்ணனியும் இல்லாத ஒரு குக்கிராமத்துச் சிறுவன் தன்னை கடவுள் என பிரகடனப் படுத்துகிறான்....சொந்த குடும்பமும்,சுற்றமும்,கிராமமும் தீவிரமாக எதிர்த்தாலும் தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காத அசுரத்தனமான மன உறுதி,ஒரு கட்டத்தில் தன்னை எதிர்த்த அத்தனை மனிதர்களையும் தன்னை வணங்க வைத்த ஆளுமை....
ஆறடி உயரமில்லை...அசரவைக்கும் ஆண்மையான குரல் இல்லை...சாதீய பிண்ணனி இல்லை...பணபலம் இல்லை...முறையான கல்வியறிவு கூட இல்லை....அன்றைக்கு புட்டபர்த்திக்கு சாலை வசதிகள் கூட இல்லை.....ஆனால் இன்றைக்கு உலகமே வந்து போகிறது......கடந்த 66 ஆண்டுகளாய் அசராமல் சாதித்துக் கொண்டிருக்கும் துல்லியமான திட்டமிடல்.......
தனது நிறுவனத்தை அதன் கொள்கைகளை, இலக்குகளை எவ்வித தடைகளுக்கும் வளைந்து கொடுக்காமல் அதே நேரத்தில் எதிர்ப்பாளர்களை சாமர்த்தியமாய் தவிர்த்துக்கொண்டு தனது ஆதரவாளர்களையும் பெருக்கி....தனது நிறுவனங்களின் கிளைகளை உலகெங்கும் வேறூன்ற வைத்த வியாயார தந்திரம்....தனக்கு தேவையானவர்களை அவர்களாகவே இவர் விரும்பியதையெல்லாம் செய்யவைதத Man Management...
இன்றைக்கு சத்ய சாய்பாபாவிற்கு உலகெங்கும் 100 மில்லியனுக்கு மேல் பக்தர்கள்....114 நாடுகளில் 1200க்கும் மேற்பட்ட கிளைகளுடன் அவரது இயக்கம் செயல்படுகிறது.மொத்த சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டாலர்களுக்கு மேலிருக்கும் என தெரிகிறது. இலவசமாய் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள்....அதி நவீன வசதிகளுடன் கூடிய இலவச மருத்துவமனைகள்.....மாநில அரசுகளால் சாதிக்கமுடியாத கூட்டுக் குடிநீர்திட்டம், தெலுங்குகங்கை திட்டம்....இப்படி இன்னும் பல்வேறு நலத்திட்டங்களை உட்கார்ந்த இடத்திலிருந்துகொண்டே ஒருங்கினைக்கும் சாமர்த்தியம்.....
இப்படி மொத்தத்தில் அவ்ர் மிக அசாத்தியமான Management Guru....வாகவே எனக்குத் தெரிந்தார்.
ஆன்மீகத்தில் அவர்....தன்னை சிவசக்தியின் அவதாரமாய் சொல்லிக் கொண்டாலும் அவ்ரது தத்துவங்களை எளிதாய் மனதில் தைக்கும் இரண்டே இரண்டு Slogans மூலம் சொல்லிவிடலாமென நினைக்கிறேன்.....LOVE ALL..SERVE ALL.......LOVE EVER HURT NEVER.
சரி இத்தனை அம்சங்களுக்காக அவர் மீது சொல்லப்படும் குறைகள் மறைந்து விடுமா.....ம்ம்ம்ம்....நிச்சயமாய் அவை விவாதிக்கபடுவதும்...விசாரிக்கப்படுவதும் அவசியமென்றே நினைக்கிறேன். அதை யார் செய்வது....அரசு செய்யுமா?...அரசியல் வாதிகள் செய்வார்களா?....இல்லை நீங்களும் நானும் செய்ய முடியுமா?.....நிஜத்தில் இது அத்தனை சாத்தியமில்லையென்றே நினைக்கிறேன்....அவர் வரையில் காலம் கடந்துவிட்டதாகவே தோன்றுகிறது....நிகழ்காலத்தில் எத்தனையோ கசப்பான நிஜங்களை ஜீரணித்து வாழப் பழகிவிட்ட நமக்கு....இது இன்னொரு....
இப்பகுதியுடன் தொடரை நிறைவு செய்துவிடவே எண்ணியிருந்தேன்....ஆனால் சாய்பாபாவுடனான எனது அனுபவங்கள்/அற்புதங்களை சொல்லாமல் நிறைவு செய்வது அத்தனை முழுமையாக இருக்காது என்பதால்,அடுத்த பதிவில் அந்தத் தகவல்களுடன் நிறைவு செய்கிறேன். அநேகமாய் அடுத்த பதிவே இந்த வலைத்தளத்தின் இறுதிப் பதிவாயிருக்கும்.....வேறொரு பெயரில் புதிதாய் பதிவினை தொடர உத்தேசித்துள்ளேன்.
தமிழ்மணத்தின் மட்டுறுத்தல் விதிகளுக்கு எதிரான எனது எதிர்ப்பினை பதிவுசெய்யும் வகையில் இந்தப்பதிவு மட்டுறுத்தல் செய்யப்படவில்லை. எனவே,தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் என்ற பகுதியில் இந்தப் பதிவு திரட்டப்படாது.
நானும் சாய்பாபாவும்-9
-1-2-3-4-5-6-7-8- சாய்பாபாவின் புகழ் வளரத்துவங்கிய தினத்திலிருந்தே அவர் மீதான விமர்சனங்களும் வளர்ந்தே வந்துள்ளன...என்ன,அதன் வளர்ச்சி விகிதம் குறைவு அல்லது அவரின் சர்வவல்லமை(?)யினால் அமு(ட)க்கப்பட்டது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.
சாய்பாபாவின் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் முதன்மையானது கையசைப்பில் பக்தர்களுக்கு அவர் உருவாக்கித்தரும் பொருட்கள்.தினமும் பலமுறை அவர் உருவாக்கித் தருவது விபூதி(ஷீரடி பாபா எரியும் அடுப்பிலிருந்து சாம்பலை எடுத்துத் தருவாராம்)....இந்த வித்தையை கொஞ்சம் பயிற்சியிருந்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம்...ஆனால் எனக்குத் தெரிந்து வேறு யாரும் செய்வதாகத் தெரியவில்லை.இவ்வகையில் சிறிய மோதிரங்கள்,வாட்சுகள்,செயின்,லிங்கம் இப்படி இன்ன்னும் சில கையடக்க பொருள்கள் அடங்கும்.
பலர் இதுபற்றி கேள்வியெழுப்பினலும் அதையெல்லாம் "Miracles are my Visiting cards" என கூறி, 'குழந்தையின் கவனத்தை தன் பக்கம் திருப்ப தாய் செய்யும் விளையாட்டை போன்றதே' தன்னுடைய வித்தைகள் என்று சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தார்.
டாக்டர்.கோவூர்போன்ற பகுத்தறிவாளர்களின் சவாலை கடைசிவரை சந்திக்க முன்வராதது அவரின் அற்புதங்களின் உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
ஓரினச்சேர்க்கையில் விருப்பமுள்ளவர் என்றும் அவரிடம் வரும் சிறுவர்களையும், இளைஞர்களையும் தனது இச்சைக்கு பயன்படுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு நெடுநாளாகவே சொல்லப்பட்டு வருகிறது. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிக்கொள்ளும் எவரும் வெளிப்படையாக தகுந்த மன்றங்களில்(காவல்துறை/நீதிமன்றங்கள்) எனக்குத் தெரிந்து குற்றச்சாட்டினை பதியவில்லை.இக்குற்றச்சாட்டினை கூறும் பெரும்பாலானோர் வெளிநாட்டு பக்தர்களே....இனையத்தில் இதுபற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன....நேரமிருப்பின் படித்துப் பாருங்கள்.
1993 ல் அவரது ஆசிரமத்தில் நடந்த கொலைகள்...அது எழுப்பிய கேள்விகள்...அந்த வழக்கு விசாரணையை அந்திர அரசு கையாண்டவிதம் இன்றளவும் விவாதிக்கப்படும் விடயம். அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் செல்வாக்கினை கொண்டு தனக்கு எதிராக செயல்படும் சக்தி மற்றும் இயக்கங்களை முடக்கினார்/அழித்தொழித்தார் என்கிற குற்றச்சாட்டும் உண்டு.
இப்படி பட்டியலை நீட்டிக்கொண்டே போனாலும் இன்றுவரை எந்தவொரு குற்றச்சாட்டு தொடர்பாக அவரை அரசின் எந்தவொரு அமைப்பும் கேள்வியோ....விளக்கமோ கேட்டதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்....அவர் இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவராகவே இருந்துவருகிறார் அல்லது....பாதுகாக்கப்படுகிறார் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.
இத்தனையும் தெரிந்தபின்னர் ஒரு முடிவுக்கு வந்தேன்....அதாவது நான் தேடிக்கொண்டிருக்கும் குரு இவராகத்தான் இருக்கமுடியுமெனெ....
ஆச்சர்யமாக இருக்கிறதா....
ஹி...ஹி...ம்ம்ம்ம்....காரணங்கள் அடுத்த பதிவில்....
தமிழ்மணத்தின் மட்டுறுத்தல் விதிகளுக்கு எதிரான எனது எதிர்ப்பினை பதிவுசெய்யும் வகையில் இந்தப்பதிவு மட்டுறுத்தல் செய்யப்படவில்லை. எனவே,தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் என்ற பகுதியில் இந்தப் பதிவு திரட்டப்படாது.
நானும் சாய்பாபாவும்-8
-1-2-3-4-5-6-7- ஆந்திர மாநிலம்...அனந்தப்பூர் மாவட்டம்.....அத்தனை எளிதில் அனுகமுடியாத மலைகள் சூழ்ந்த குக்கிராமம்....வறுமை,அறியாமை,கல்லாமை... என இப்படி ஏகப்பட்ட ஆமைகளை தன்னகத்தே கொண்ட குக்கிராமம்தான் புட்டபர்த்தி....இன்றைக்கும் புட்டபர்த்தியை சுற்றியுள்ள சில கிராமங்கள் அதே நிலையிலேதான் உள்ளன என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்....
1926,நவம்பர் 23ம் தேதி மிகச்சாதாரணமான ஏழைக்குடும்பத்தில் பிறந்த சத்ய நாராயண ராஜுதான் நம்ம சாய்பாபா....14 வயது வரை மற்ற குழந்தைகளைப்போலவே இருந்த சத்யா....திடீரென புத்தி பேதலித்தவனைப் போலாகி சிகிச்சையெல்லாம் பலனலிக்காத ஒரு நாளில் தான் சாய்பாபாவென அறிவித்தான்(ர்).மஹாராஷ்டிர மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் (September 27, 1838 - October 15, 1918) வாழ்ந்து மறைந்த முஸ்லீம் பக்கீரான சாய்பாபாவின் மறு அவதாரமென அறிவித்தான் அந்தச் சிறுவன்.
அந்த வயதுக்குறிய கிராமத்து பாமரச் சிறுவனைப்போலல்லாது தேர்ந்த மந்திரவாதியைப் போல காற்றிலிருந்து பொருட்களையும்,தின்பண்டங்களையும் வரவழைத்துத் தருதல், தன்னை அவதாரமெனவும் தன்னைச் சரணடைபவர்களுக்கு அருள்பாலிப்பதாயும் செய்த பிரகடனத்தினால் கிராமத்தினர் சிறுவனுக்கு ஏதோ பேய் பிடித்ததாய் நினைத்து போயோட்டும் முயற்சியில் பலவாகிலும் துன்புறுத்தி எதுவும் பலிக்காமல் போகவே....ஒரு கட்டத்தில் சிறுவன் கூறுவதை நம்மத் துவங்கினர்.
ஆரம்பத்தில் சிறிய அளவில் தன் வீட்டிலேயே பஜனைகள்,பிரசங்கம்,சின்ன சின்ன வித்தைகள் என தனக்கென ஒரு பக்தர்கள் கூட்டத்தினை கொண்ட சத்யநாராயண ராஜுவின் புகழ் நாளடைவில் பக்கத்து கிராமம்....ஊர்...மாவட்டம்...மாநிலம்...நாடு....என விரிவடைந்தது.அந்த காலகட்டத்தில் வாழ்ந்த நமது மக்களின் கல்வியறிவு(?), மற்றும் விழிப்புணர்வின்(!) காரணமாய் சத்யநாராயண ராஜு என்கிற சாமான்ய இளம் பாலகன்...சாய்பாபாவென பிரும்மாண்டமான அவதாரபுருஷனாக்கப்பட்டார்.
இன்றைக்கு ப்ரசாந்தி நிலையம் என்கிற ஆஷ்ரமம்தான் சாய்பாபாவின் இருப்பிடம் மற்றும் அவரது தலைமயகம்....அவரது சாய்சேவா அறக்கட்டளை 114 நாடுகளில் தனது கிளைகளை வேரூன்றி விருட்சமென வளர்ந்திருக்கிறது.கடந்த பல ஆண்டுகளாய் தொடர்ச்சியாய் இந்தியாவிலேயே அதிகபட்ச நன்கொடைகளைப் பெரும் நிறுவனம் இது...
மேலே சொன்னது சாய்பாபாவின் நேர்மையான வாழ்க்கைக் குறிப்பு....இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்றே நினைக்கிறேன்.சாய்பாபாவ்வின் உலகலாவிய புகழும் அற்புதங்களும்....மிகைப்படுத்தப் பட்ட கடவுள் தன்மையும் அனைவரும் அறிந்ததே....அதைப் பற்றி இந்தப் பதிவுகளில் நான் விவாதிக்கப் போவதில்லை......
ஆனால் சாய்பாபாவின் மறுபக்கம்....ம்ம்ம்...சர்ச்சைக்குள்ளான அவரது மறுபக்கம்தான் அடுத்த பகுதியில்...
அதுவரை...பொருத்திருங்கள்.
தமிழ்மணத்தின் மட்டுறுத்தல் விதிகளுக்கு எதிரான எனது எதிர்ப்பினை பதிவுசெய்யும் வகையில் இந்தப்பதிவு மட்டுறுத்தல் செய்யப்படவில்லை. எனவே,தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் என்ற பகுதியில் இந்தப் பதிவு திரட்டப்படாது.
நானும் சாய்பாபாவும்-7
-1-2-3-4-5-6- ஆன்மீகத்தில் அறிவியல் என்கிற தேடலின் தொடர்ச்சியாய் சித்தர்கள்,மந்திரம், தந்திரம், யந்திரம்,முத்திரைகள், நியூமராலஜி, வாஸ்து,பிரமிடுகள்,யோகம்,தியானம், பெஃங்ஷுய் என எல்லாத் தலைப்புகளிலும் வாசிக்கத் துவங்கியிருந்தேன்....தி.நகர் வடக்கு போக் சாலையில் இருந்த 'எல்லூர்' நூலகம் இந்தவகையில் பெரிதும் உதவியாய் இருந்தது.புத்தக வாசிப்புகள் அறிவியல் சித்தாந்தங்களே நாளடைவில் கடவுளர்களாய்,சடங்குகளாய் உறுமாறியது என்கிற எனது கருத்தினை உறுதிப்படுத்தியது.இவற்றை அடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லிக்கொடுத்த குருகுலங்கள் நாளடைவில் அழிந்துபோனதால் தகவல்கள் நமக்கு முழுதாய் வந்து சேராமல் போய்விட்டது.
என்னைப் போலவே என் உறவினர் ஒருவரும் இந்த தெலுங்கு நபரால்(சென்னையில் 12,கோவையில் 7 நிறுவனங்கள் என சுமார் 30 கோடி ரூபாய்க்கு ஏமாற்றித் தலைமறைவாகிவிட்டிருந்தார் அந்த நபர்) ஏமாற்றப்பட்டு கடனை அடைக்க படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார்.....ஆறுதல் சொல்வதைதவிர என்னால் வேறெந்த உதவியும் செய்யமுடியாதவனாய் இருந்தேன்.அண்ணாநகரில் இருந்த ஒரு இடத்தைவிற்று கடனை அடைக்கலாம் என்றால் அதில் இருந்த நடைமுறை சிக்கலால் விற்கமுடியாமல் அவமானங்களை சந்தித்துக்கொண்டிருந்தார்.
அநேகமாய் தினமும் சந்தித்தோ அல்லது தொலைபேசியோ கொண்டிருந்த நான் இடையில் பத்து நாட்களாய் அவரை தொடர்பு கொள்ளமுடியாமல் போய்விட்டது...சரி எப்படி இருக்கிறார் என கேட்டுப் பார்ப்போம் என ஒரு மாலையில் அவரை அழைத்தபோது புட்டபர்த்திக்கு போவதற்காக கோயம்பேட்டில் நின்று கொண்டிருப்பதாக கூறியது ஆச்சர்யமான அதிர்ச்சியாய் இருந்தது....ஏனெனில் அவர் என்னை விட தீவிரமான நாத்திகர்...தன் தாய் மட்டுமே தெய்வம் என அவரை மட்டுமே வணங்குபவர். புட்டபர்த்தியில் இருந்து திரும்பியதும் சந்திக்கலாம் என கூறினார்.ஆவலாய் அவர் வருகைக்கு காத்திருந்தேன்.
ஊரில் இருந்து திரும்பியதும் அழைத்தார்...ஆவலாய் ஓடினேன்...அவர் என்னை விட இன்னொரு மடங்கு வயதினர். வழக்கத்தை விட நிதானமாய் நிறைவாய் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்....."என்ன சாமி மலையேறிடுச்சா, திடீர்னு பக்தியெல்லாம் வந்து புட்டபர்த்தி அது இதுன்னு என்ன ஆச்சு உங்களுக்கு அதுவும் இத்தனை வயசுக்கப்புறம்" என கேள்விகளாய் தொடர்ந்தவனனப் பார்த்து....சிரித்துக்கொண்டே... "கடவுளைக் கண்டேன்...நீயும் வா உண்னை கூட்டிப்போகிறேன்" என்றார்.....நான் குழப்பத்துடன்...."தலைக்கு மேல ஆயிரம் பிரச்சினையிருக்கு அதை முடிக்கிற வழியப்பாக்காம சாமியார் அது இதுன்னு கதை சொல்லீட்டு இருக்கீங்களே" என கவலையுடன் சொன்னபோது...எல்லா கடனையும் அடைச்சிட்டேன் எனக்கூறி ஆர்ச்சர்யப்படுத்தினார்.
நடந்தது இதுதான்.....இவர் பிரச்சினையுடன் சுற்றிக் கொண்டிருந்தவேளையில் தெரிந்தவர் ஒருவர் சாய்பாபா பற்றிய ஒரு புத்தகத்தை கொடுத்து இதைப் படி தெளிவு கிடைக்குமென கூறியிருக்கிறார்.நம்மவர் எரிச்சலாய் அப்புத்தகத்தை தூக்கி ஒரு ஓரத்தில் போட்டுவிட்டார், ஒரு நாள் கடன்காரர்களிடம் அவமானப்பட்டு வீடு திரும்பி...என்ன வாழ்க்கை என வெறுத்து உட்கார்ந்திருந்த வேளையில் அந்த புத்தகம் கண்ணில் பட்டிருக்கிறது....அப்போதிருந்த மனநிலையில்....இவராவது உதவுவாரா என நினைத்து அந்த புத்தகத்தை எடுத்து புரட்டியிருக்கிறார்.
புத்தகத்தில் இருந்து ஒரு விசிட்டிங் கார்ட் கீழே விழுந்திருக்கிறது.அது அண்ணா நகரில் இருக்கும் ஒரு நகைக் கடை முதலாளியின் கார்ட்.அது எப்படி புத்தகத்தினுள் வந்தது தெரியவில்லை.....ஏதோ உள்ளுணர்வு உந்த அவருக்கு தொலைபேசி அண்ணாநகரில் தனது இடம் விற்பனை பற்றிக்கூறி வாங்கும் உத்தேசம் ஏதும் இருக்கிறதா எனக் கேட்டிருக்க்கிறார்.நம்பினால் நம்புங்கள்....ஒரே வாரத்தில் அவர் அதுகாறும் சொல்லிக்கொண்டிருந்ததை விட கூடுதல் விலைக்கு அவர்களுக்கு விற்றுவிட்டிருந்தார்.ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்த கையோடு அந்த நாத்திகர் புட்டபர்த்திக்கு சென்றுவந்திருந்தார்.
எனக்கு அவரது பிரச்சினை தீர்ந்த மகிழ்ச்சியிருந்தாலும், அவரை கேலிசெய்தேன்....எனக்குள் கொடைக்காணல் நிகழ்வுகள் நெருடியதை காட்டிக்கொள்ளவில்லை.இது மாதிரியான அற்புதங்கள் சாத்தியமா?....எனக்கு இது இரண்டாவது அனுபவம்....அதனால் புறக்கணிக்கவும் முடியவில்லை.....அதன் பிறகே சாய்பாபாவினைப் பற்றிய தகவல்களை அறிய ஆர்வம் காட்டினேன்.....
அதாவது....
தமிழ்மணத்தின் மட்டுறுத்தல் விதிகளுக்கு எதிரான எனது எதிர்ப்பினை பதிவுசெய்யும் வகையில் இந்தப்பதிவு மட்டுறுத்தல் செய்யப்படவில்லை. எனவே,தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் என்ற பகுதியில் இந்தப் பதிவு திரட்டப்படாது.
நானும் சாய்பாபாவும்-6
-1-2-3-4-5- ஆன்மீகம் பற்றிய புதியநிலைப்பாடு ....ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் மீனாட்சியம்மன் கோவிலுக்கும்...சனிக்கிழமைகளில் திருமோகூருக்கும் போய்வர வசதியாகப் போயிற்று. கருவறைகளில் மனதை ஒருநிலைப்படுத்தி வணங்க முடிவதையும்... விபூதி,குங்குமம் வழங்கப்படுவதன் மகத்துவமென்ன....உயர உயரமாய் கோபுரங்கள் எதற்காய்....கோபுரங்கள் ஆண்ட்டெனாவைப் போல் செயல்படுகின்றனவா என்றெல்லாம் புத்தி அலைந்தது.
ஆராதனைகள்...அர்ச்சனைகள் என்கிற புறவட்டத்தைத் தாண்டி ஆன்மீகத்தில் புதைந்திருக்கும் அறிவியலையே மனம் நாடியது. எத்தனையோ கோவிலுக்குப் போனாலும் சில கோவில்கள் உண்டாக்கிய அதிர்வுகள் மட்டுமே நேர்மையானதாய் தோன்றியது....மதுரையிலே மீனாட்சியம்மன்....திருமோகூர் காளமேகப்பெருமாள்...பழனி தண்டாயுதபாணி ஸ்வாமி....இந்த வரிசையில் கடைசியாய் அம்பத்தூரை அடுத்துள்ள திருமுல்லைவாயில் வைஷ்ணவி ஆலயம்.
தேடுதல் ஒருவகை சுகமென்றால் எங்கே தேடுவது எனக் காட்டிக்கொடுக்க ஒருவர் இருந்தால்....ஆம்! ஆன்மீகத் தேடலுக்கு குரு ஒருவர் தேவைப்பட்டார்....எனக்கான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது அல்லது குருவே என்னை அடையாளம் காண்பாரா?.அப்படி குருவே என்னை தேடிக்கண்டு கொண்டால் எத்தனை வசதியாயிருக்கும் என்றெல்லாம் மனம் யோசித்தாலும்....தொழிலிலும் கவனமிருந்தது.அதே நேரத்தில் நெருடிய மற்றொரு விடயம் நல்ல குருவிற்கான இலக்கணம் என்ன?
இந்த பத்தாண்டுகளில் தொழிலில் மளமளவென வளர்ந்திருந்தேன்...தக்க சமயங்களில் கிடைத்த எதிர்பாராத உதவிகளினால் 2000ம் ஆண்டில் எனது 31ம் வயதில் கோடிகளில் விற்றுவரவு செய்யும் நிலமைக்கு வந்திருந்தேன்.அன்றைய நிலையில் எனது நிறுவனங்களில் நானூறு பேருக்கு மேல் பணியிலிருந்தனர்.என்னை விட 6-7 வயது இளைய ஒரு தெலுங்கு நபரால் மிக சாமர்த்தியமாய் ஏமாற்றப்பட்டு...கற்பனையான ஒரு நிறுவனத்திற்கு விற்பதற்கான சரக்கை தயாரித்திருந்தோம்....மூன்றே மாதங்களில் ஒன்றரைக் கோடி ரூபாயை இழந்தேன்...
Working Capital இல்லாமல் தொடர்ந்து உற்பத்தியை தொடர முடியாமலும் தொழிலாலர்களுக்கு சம்பளம்(மாதம் ஏழு லட்சம் வரை) கொடுப்பதும் சிரமமாய் போய்விட்ட நிலையில் என்னைத் தாங்கிப் பிடிக்கத் தேவையான உதவிகள் என்னைச் சுற்றியிருந்தாலும் யாரும் சமயத்தில் உதவ முன்வரவில்லை.இருநூறு ரூபாய் அசலுக்குத் தயாரிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் 30-32 ரூபாய்க்கு விற்று Suppliers க்கு ஓரளவிற்குத் தீர்த்தேன்....வங்கியில் வாங்கியிருந்த Packing Credit, TIIC ல் வாங்கியிருந்த கடன்களுக்கு வேறுவழியின்றி தொழிற்சாலையிலிருந்த கடைசி இயந்திரம் வரை விற்றும் சரிசெய்ய முடியாது தொழிற்சாலையையும் விற்றுக் கடனை அடைத்து வெளியே வந்த போது இன்னமும் பதினெட்டு லட்சம் ரூபாய் பாக்கியிருந்தது.
இரண்டு பத்திகளில் எழுதிவிட்ட இந்த விடயங்களின் வலியையும் அவமானங்களையும் எத்தனை பேர் புரிந்துகொள்வீர்கள் என தெரியவில்லை.முதலாம் தலைமுறை தொழிலதிபர்களுக்கு இதுமாதிரியான பின்னடைவுகளில் தக்க பின்புலம் இல்லையெனில் பலர் தற்கொலை வரை சென்றுள்ளதைப் பார்த்திருக்கிறேன்.எனக்கு அப்படியான எண்ணங்கள் ஏதும் வரவில்லை...அடுத்த கட்டத்திற்குப் போவதற்கு முன் என்னை Regroup செய்து கொள்வது மிக அவசியமென உறுதியாக நினைத்தேன்.கையில் திரையரங்கம் ஒன்று மிச்சம் இருந்தது,அதை நிர்வகிக்க என்னுடைய மிகையான உழைப்புத் தேவைப்படாததால் கிடைத்த சமயங்களில் நிறையவே படிக்க ஆரம்பித்தேன்......இச்சமயத்தில் கடன்களையும் அடைத்து முடித்திருந்தேன்....ஏனோ மீளவும் இழந்த தொழிலை திரும்ப ஆரம்பித்து என்னை நிரூபித்துக் கொள்ளவேண்டுமெனத் தோன்றவில்லை.
புதிய தேடல்களுக்குத் தயாரானேன்...
தமிழ்மணத்தின் மட்டுறுத்தல் விதிகளுக்கு எதிரான எனது எதிர்ப்பினை பதிவுசெய்யும் வகையில் இந்தப்பதிவு மட்டுறுத்தல் செய்யப்படவில்லை. எனவே,தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் என்ற பகுதியில் இந்தப் பதிவு திரட்டப்படாது.
நானும் சாய்பாபாவும்-5
-1-2-3-4- பண்டையகாலத்தில் மிகையான ஒருபோக விளைச்சலுடன் வீட்டில் மல்லாந்துகிடந்தவன் தன்னுடைய ஆசாபாசங்களை வெளிப்படுத்த தேடிக்கொண்ட வடிகால்களே மதம்,பக்தி,இறைவன்,கலை,கூத்து,போர்கள் இப்படி எல்லாமே...
என்வரையில் கடவுள் என்பது தக்க சமயத்தில் ஒருவனுக்கோ அல்லது பலருக்கோ பயண்தரும் ஞானமும் அனுபவமே, மற்றபடி கோவிலில் நிற்கும் கடவுளின் சிலைகள் வெறும் அடையாளங்களே...அவற்றிற்கு எவ்வித சக்தியும் கிடையாது....முக்கியமாய் எந்த பக்தனின் கோரிக்கையையோ பிரார்த்தனையையோ செவிமடுத்து அருள்பாலிக்கும் தன்மையற்ற வெறும் கற்சிலைகளே....ஆனால் இந்த சடங்குகள், கட்டுமானங்களுக்குப் பின்னால் இன்னமும் அவிழ்க்கப்படாத பல அறிவியல் முடிச்சுகள் உள்ளது என்பதை மறுக்க இயலாது.
தங்கள் பகட்டையும் படாடோபத்தையும் வெளிப்படுத்த மன்னர்கள் கோவில்கள் என்கிற பெயரில் கலை மற்றும் சமுதாயக்கூடங்ளை உருவாக்கினர்.ஒரு காலகட்டத்தில் அம் மன்னன் இறந்தபோது அவனது சமாதிகளே கோவில்களாய் மாற்றமடைந்து...பின்னர் அவர்களின் வீரதீரங்கள் மிகைப்படுத்தப்பட்ட கதைகளாகச் சொல்லப்பட்டு காலப்போக்கில் அவர்கள் கடவுளர்களாய் சித்தரிக்கப்பட்டிருக்கலாம்..(சாதாரன வீரனொருவன் இறந்தால் நடுகல் நடப்படுவதும்...மன்னர்களின் சமாதிகள் பள்ளிப்படை கோவில்கள் என அறியப்பட்டதாக படித்திருக்கிறேன்)
இந்த ஊரின் கதாநாயகன் காளமேகமும், பக்கத்து ஊரின் கள்ளழகரும் நிஜத்தில் வேறுவேறு மனிதர்களாய் இருந்து இடையில் உள்ளே நுழைந்த சில சாமர்த்தியசாலிகள்(!) இந்த நிஜங்களுக்கு அமானுஷ்ய வர்ணம்தீட்டி நிஜமனிதர்களை அடுத்தடுத்து வந்த சந்ததியினருக்கு அவதாரங்களாய்க் காட்டி சடங்கு மற்றும் சாஸ்த்திரங்களை உருவாக்கி அதை நெறிப்படுத்தும் உரிமையை இறைவன்(!) தங்களுக்கு அளித்திருப்பதாக காட்டிக்கொண்டிருக்கலாம்.
எனவே....
இக்கோவிலில் உறையும் இறைவன் நிச்சமாய் ஒரு காலத்தில் சிறப்புடன் வாழ்ந்து முடிந்த நம்முடைய ஒரு மூதாதையாக இருக்கலாம், எனவே அவனிடம் சென்று மரியாதை நிமித்தமாய் "ஹாய் நான் நல்லா இருக்கேன்...நீ நல்லாயிருக்கியா தலைவா!, முடிஞ்சா அடுத்தவாரம் வந்து பார்க்கிறேன்"ன்னு சொல்லிட்டு வர்றதுல தப்பில்லையே என்கிற தீர்மானத்திற்கு வந்தேன்
இப்படியாக என்னை சமரசம் செய்து கொண்டு காளமேகப்பெருமாளையும், அன்னை மீனாட்சியையும் வெறுப்பில்லாமல் பார்க்கச்சென்றேன்.என்னுடைய இந்த தெளிவுகள என் சுற்றத்தால், நான் உண்மையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாது காரணகாரணிகளின் பின்னால் பதுங்கிக் கொண்டு சாமி கும்பிட ஆரம்பித்திருப்பதாகவே தீர்மாணிக்கப்பட்டது.
மற்றபடி கோவிலுக்குப் போய் பிரார்த்தனை என்கிற பெயரில் எனக்கு அதைக் கொடுத்தால் நான் இதை காணிக்கையாக்குகிறேன் என்கிற பேரம் பேசும் விடயங்களை இன்றுவரை அறுவெறுப்புடனே நோக்குகிறேன். பக்கம் பக்கமாய் பகவானின் பெயரை எழுதுவதால் எனக்குத்தெரிந்த ஒரே நன்மை உங்கள் கையெழுத்து சீராகலாம்...கவனித்து எழுதும் பட்சத்தில் உங்கள் கவனக்குவிப்பு அதிகரிக்கலாம் அவ்வ்வளவே.நவக்கிரகங்களைச் சுற்றுவதும்,பிரகாரங்களை வலம்வருவது
உடற்பயிற்சிக்குத்தானெயொழிய வேறெதெற்கும் பயன்படுவதில்லை.மலைமீது கோவிலமைத்ததும்
இந்த சூட்சுமத்தில்தான்.முன்பு பிரசாதங்கள் என்கிற பெயரில் மூலிகைகளே
தரப்பட்டது...துளசிதீர்த்தம் விந்தின் அடர்த்தியினை குறைத்து கருவுறுதலை
தடுக்கும்.இப்படி நிறைய அறிவியற் காரணங்கள் மறைக்கப்பட்டு மறந்தே போய்விட்டோம்
நாம்....
தமிழ்மணத்தின் மட்டுறுத்தல் விதிகளுக்கு எதிரான எனது எதிர்ப்பினை பதிவுசெய்யும் வகையில் இந்தப்பதிவு மட்டுறுத்தல் செய்யப்படவில்லை. எனவே,தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் என்ற பகுதியில் இந்தப் பதிவு திரட்டப்படாது.
நானும் சாய்பாபாவும்-4
-1-2-3- நிமிர்ந்து கோவிலைப் பார்த்தேன்....இத்தனை பெரிய கட்டமைப்பும் அதில் வகைவகையாய் பூசை மற்றும் சடங்கு முறைகள் எல்லாம் கல்லாய் நிற்கும் காளமேகத்துக்கும், சக்கரத்தாழ்வாருக்கும்...காலங்காலமாய் தெய்வகுத்தம் வந்துவிடுமென ஊரும்,சனமும் மாய்ந்து மாய்ந்து பராமரிக்கும் அளவுக்கு இந்த தெய்வங்கள் அத்தனை சிறந்தவர்களா என்ன?....
அதற்கான வாய்ப்புகள் குறைவேயென அழுத்தம்திருத்தமாய் நம்பினேன்...
சரி...தீவிரமான நாத்திகம் கடைசியில் என்னதான் சொல்ல வருகிறது?
....எதுவுமில்லை அல்லது எல்லாம் மாயை அல்லது சிலர் வயிற்றுப்பிழைப்புக்காய் தங்கள் வசதிக்காய் உருவாக்கி வைத்த மாயகட்டுக்களை அவிழ்த்தெறி......
அதைத்தாண்டி என்ன?
இந்த ரீதியிலான வீழ்படிவுகள் மனதில் தேங்கத்துவங்கியிருந்தது.......
பகுத்தறிவும், சுயமரியாதையும் ஒருவரின் நாத்திகத்தனத்தை அளக்கும் அளவுகோல்களா?...
இப்படி கேள்விகளையும் பதில்களையும் தேடித்தேடி சிந்தனை வளையங்கள் விரியத்துவங்கியிருந்தாலும்,ஒவ்வொரு சனிக்கிழமை காலை 7 மணிக்கெல்லாம் அங்கிருப்பேன்...அந்த காலைநேர....அமைதியும், கோவில்வளாகம் எனக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகளும் மனதிற்கிதமாய் அமைந்திருந்தன....காளமேகப் பெருமாளின் கருவறைக்குப் பின்னிருக்கும் ஆளரவமற்ற பிரகாரத்தில் வெறுமையாய் அமர்ந்திருப்பது பிடித்திருந்தது.....சிற்பங்களையும் அதனைச் செய்த சிற்பிகளையும் மனம் ரசிக்கத்துவங்கியிருந்தது.
நான் கோவிலுக்கு போக ஆரம்பித்ததில் வீட்டினரின் மகிழ்ச்சியோ, நண்பர்களின் கேலியோ பெரிதாய் பாதிக்கவில்லை...நான் எதையோ தீவிரமாய் தேடிக்கொண்டிருப்பவனைப் போலிருந்தேன்.
ஒரு கட்டத்தில் என்னை சமரசம் செய்துகொள்ள முனைந்தேன்...
அதாவது.....
தமிழ்மணத்தின் மட்டுறுத்தல் விதிகளுக்கு எதிரான எனது எதிர்ப்பினை பதிவுசெய்யும் வகையில் இந்தப்பதிவு மட்டுறுத்தல் செய்யப்படவில்லை. எனவே,தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் என்ற பகுதியில் இந்தப் பதிவு திரட்டப்படாது.